×

பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமாண்டோ வருண் சிங் உடல் நிலை கவலைக்கிடம்: உயிரை காப்பாற்ற போராடும் மருத்துவ குழுவினர்

பெங்களூரு: குன்னூர் காட்டேரி ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கமாண்டோ கேப்டன் வருண் சிங் பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் மருத்துவ குழுவினர் அவரை காப்பாற்ற போராடி வருகின்றனர். தமிழகம் மாநிலம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடுத்த குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 8 ராணுவ அதிகாரிகள் டெல்லியில் இருந்து கடந்த 8ம் தேதி கோவை சூலூர் விமானப்படைத் தளத்திற்கு சென்றிருந்தார்.

பின்னர் அங்கிருந்து பிபின் ராவத் மற்றும் மனைவி உள்பட 14 பேர் எம்.ஐ 17வி5 ஹெலிக்காப்டர் மூலம் வெலிங்டன் ராணுவ முகாமிற்கு சென்று கொண்டிருந்தனர். சூலூரை அடுத்த காட்டேரி நஞ்சப்பாசத்திரம் பகுதியில் உள்ள வனப்பகுதியின் மேலே பறந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் வனப்பகுதிக்குள் விழுந்து தீ பிடித்து எரிந்தது. இதில் ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டரை ஓட்டி சென்ற குரூப் கமாண்டோ கேப்டன் வருண் சிங் பலத்த காயமடைந்தார்.  80 சதவீதம் தீ காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவருக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு சிறப்பு மருத்துவர் குழுவினர், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வருண் சிங்குக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தனர்.

தொடர்ந்து, ஒவ்வொரு மணி நேரம் அவரது உடல் நிலை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டெல்லி விமானப்படை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் டிவிட்டர் பக்கத்தில், ‘வருண் சிங் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. தொடர்ந்து அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளனர்.

* என் மகன் வீழ்ந்துவிடமாட்டார்- தந்தை உருக்கம்
போபாலில் உள்ள வருண் சிங்கின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான கர்னல் கே.பி சிங் கூறுகையில், ‘என்னுடைய மகன் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு இந்திய ராணுவமும், பல்வேறு தரப்பட்ட மக்களின் பிரார்த்தனையும் துணையாக இருக்கிறது. பலர் அவரை பார்க்கவேண்டுமென்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர் வெற்றியுடன் மீண்டு வருவார்.சிறந்த மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். என் மகன் வீழ்ந்துவிடமாட்டார். அவர் சூரியனை போன்று மீண்டும் உதித்தெழுவார் என்ற நம்பிக்கை எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உள்ளது’ என்றார்.

Tags : Commando Varun Singh ,Bangalore Army Hospital , Commando Varun Singh, who is undergoing treatment at the Bangalore Army Hospital, is in critical condition.
× RELATED பெங்களூரு ராணுவ மருத்துவமனையில்...